காதலெனும் முடிவிலியில்....

6.19.2013

ஒரு முறை விமான நிலையத்துக்கு வாங்களேன்!!


தனதும், தன் குடும்பத்தார் வாழ்வு சிறக்க இரவென்றும்.., பகலென்றும்.., பாராமல் கண்டம் விட்டு கண்டம்,  நாடு விட்டு நாடு பறக்கும் "விமான பணிப்பெண்களின் கனவுகளையும்...,

ஊரார் மெச்ச பேருக்கு பின்னால் பி.ஈ என்ற ஈரெழுத்தை வாங்க, அடமானம் வைத்த காட்டையும், வீட்டையும் மீட்கவும், அக்கா திருமணத்திற்கு வாங்கிய கடனை அடைக்கவும், அன்பு காதலியை பிரிந்து, அரபு பாலைவனத்தில் வேர்வை சிந்த பயணிக்கும் "இளைஞனின் கடமையையும்.....,

ஒரு மாதமாக சாக்லேட், ஐஸ், குலதெய்வ கோயில், உறவினர் வீடு, இரவில் தூங்கும் முன் கதை, உப்பு மூட்டை என அசத்திய அப்பா, இப்போ போனால் திரும்ப வர குறைந்தது இரண்டு வருடமாகும் என்பதை உணராமல், விமான நிலையத்தின் பிரமிப்பில் ஆயிரம் கேள்வி கேட்கும் குட்டி பெண்ணின் சுட்டித்தனத்தையும்...,

கட்டிய மஞ்சள் தாலி கயிற்றின் வாசம் மாறாமலும், அவனிட்ட முத்தத்தின் ஈரம் காயமலிருக்கும்போதே வழியனுப்பும் மனைவியின் "மோகத்தையும்"...

காதலென்னும் கவிதையை கட்டிலில் படித்து, அதற்கு மனைவி அளித்த பரிசான... மழலையை, கண்டு உச்சி முகர ஓடோடி வரும் தந்தையின் “ஆர்வத்தையும்...,

இருவது வருடம் பாலூட்டி, சீராட்டி வளர்த்து, அவள் விருப்பப்படி மணமுடித்து, ஆயிரம் ஆசை கனவுகளை தாங்கி செல்லும், யு.எஸ் மாப்பிள்ளையையும், மகளையும் ஊறுகாயும் , இட்லிப்பொடியும் தந்து வழியனுப்பும்  பெற்றோரின் அக்கறையையும்"...

உலக அரங்கில் நாட்டின் பெருமையை நிலைநாட்ட செல்லும் விளையாட்டு வீரனின் வீரத்தையும்..,  ஆயுர்வேதத்தையும், சித்த மருத்துவத்தையும் நம்பாமல் வெளிநாடு சென்று சிகிச்சை பெற செல்லும் நோயாளியின் அறியாமையையும்...,

வீட்டில் இருக்கும் பெரிசு, நண்டு, சிண்டு நட்டுவாக்களி தொந்தரவின்றி தேனை ருசித்து, நிலவை ரசிக்க ஊட்டி, கொடைக்கானல், காஷ்மீர் செல்லும் புதுமண தம்பதியினரின் காதலையும்..,

பரம்பரையிலே முதல் ஆளாய் பட்டம் வாங்கி, வெளிநாட்டில் வேலை செய்ய போகும் தன் மகனை(ளை), சாராயம் குடிக்காதே, வெள்ளி பீடி புடிக்காதேன்னு அட்வைஸ் சொல்லி, கடல் கடந்து போகும் தோஷம் தீர இடுப்பிலும், கையிலும் தாயத்து கட்டி, புளிசோறும் ஊறுகாயும் கட்டிக்கிட்டு, வேனில் வந்திருக்கும் கிராமத்து மனிதர்களின் அப்பாவித்தனத்தையும்... 

என்னமோ ஏர்போர்ட் வர்றவங்கலாம் டாட்டா, அம்பானி வாரிசுன்னு நினைச்சு 20ரூபாய் மதிப்புள்ள பழரசத்தை 120ரூபாய்க்கும், 10ருபாய் மதிப்புள்ள சமோசாவை 60க்கும் விற்கும் கடையும்.., 6 கிமீ தூரத்தை பயணிக்க 450 ரூபாய் கேட்கும் டாக்சிக்காரங்களின் ”நினைப்பையும்”..,

அருமைப் பெருமையாய் வளர்த்து.., நல்ல கல்வி தந்து.., வசதியான பெண் பார்த்து முடித்து.., என் பையன் ***** நாட்டுல வேலை செய்யுறானாக்கும்.., இது என் பையன் வாங்கித்தந்ததுன்னு.., தள்ளாத முதுமையில் மகன்(ள்) பெருமை பேசி.. மடிந்த பெற்றோரின் இறுதி சடங்கை செய்ய, இரண்டு நாள் கழித்து  ஓடோடி வரும் மகனி(ளி)ன் “கண்ணீரையும்...,

பருப்பில்லை, எண்ணெயில்லை, உங்களுக்கு பொறுப்பில்லை என்று நச்சரித்து அனுப்பும் மனைவியின் டென்சனை புறந்தள்ளி, ஆசை , காதல், பொறுப்பு, காதல், அக்கறை, கண்ணீர் தாங்கிய கனவுகள் ஈடேற அவர்களை, பெற்ற  தாய் போல பாதுகாப்போடு சேருமிடம் சேர்ப்பிக்கும் விமான ஓட்டியின் ”பொறுப்பையும்”.., 

அனைத்து உணர்ச்சிகளையும் ஒரு சேர  ஒரே இடத்தில் காணவேண்டுமா??

                    ”ஒருமுறை வாருங்கள் விமான நிலையத்திற்கு”!!.....,



என் மகள் தூயாவை பார்க்க பெங்களுரு ஏர்போர்ட் போய் இருந்தேன். அங்க இருக்கும்போது எத்தனை விதமான மனிதர்கள்?! அழுகை, கோவம், ஆனந்தம், கண்ணீர்ன்னு பலதரப்பட்ட மனிதர்களை சந்திக்க நேர்ந்தது..,  அதான் மனசுக்கு தோணுணதை எழுதிட்டேன்.., தூயா அங்க எடுத்த படங்கள் சில...,

   In Qatar flight. " first class"seat.


 In Ramp at Bangaluru International Airport

 Outside of Terminal Building at Bangaluru International Airport